Pope Francis with Youth
பதுவை பார்பாரிகோ கல்வி நிறுவன மாணவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 31 Mar, 2019
பதுவை பார்பாரிகோ கல்வி நிறுவன மாணவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
இத்தாலியின், பதுவை மறைமாவட்டத்தின் ஆயர் கிரகோரியோ, பார்பாரிகோ கல்வி நிறுவனத்தின், ஏறக்குறைய 1,150 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, மார்ச் 23 ஆம் தேதி , புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் சோஃபியா என்ற சிறுமி, அடுத்து எந்த கல்வி நிறுவனத்தைத் தேர்ந்துகொள்வது என்பது தெளிவாக இல்லை என்று கூறியதற்குப் பதிலளித்த திருத்தந்தை, வாழ்வில் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அறிந்து, இளமைத் துடிப்புடன், வருங்காலத்தை மகிழ்வோடு நோக்கும் திறனில் முதலில் வளர வேண்டும் என்று கூறினார்.
இளமைப்பருவத்தில், எதுவுமே இலவசம் கிடையாது, இலக்குகளை எட்டுவதற்கு, கடுமையாக உழைக்க வேண்டும், ஆனால், கடவுளின் அன்பு மட்டுமே, அவரின் அருள் மட்டுமே இலவசமாகக் கிடைப்பது, ஏனெனில், அவர் எப்போதும் நம்மை அன்புகூர்கிறார், ஆயினும், நீங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு, ஒவ்வொரு நாளும் முயற்சி செய்ய வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
இளையோர், வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கும் பணிகள், பைகளை பணத்தால் நிரப்புவதற்காக அல்லாமல், பிறருக்கு சிறப்பாகச் சேவையாற்றுவதாக இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சமுதாயத்திற்குச் சேவையாற்றும் பணியைத் தேர்ந்தெடுத்து, ஏனையோர்க்கு எடுத்துக்காட்டாய் விளங்குங்கள் என்றும் கூறிய திருத்தந்தை, கிளிப்பிள்ளை போன்று செபம் செய்யாமல், இதயத்திலிருந்து செபிக்க வேண்டும் என்றும், தாத்தா பாட்டிகளிடம் கலந்துரையாட வேண்டும் என்றும், மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இளமை என்பது, சொகுசு இருக்கைகளில் அமர்ந்துகொண்டு சோம்பேறித்தனமாக இருப்பது அல்ல, மாறாக, வாழ்வில் முக்கியமான இலக்குகளை எட்டுவதற்கு, ஊக்கத்துடன் முயற்சிகளில் ஈடுபடுவதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, இத்தாலிய மாணவர்கள் குழு ஒன்றிடம் கூறினார்.
தான் மாணவராக இருந்தபோதே வேலை செய்த அனுபவத்தையும், க்ஷயசயெசபைடி கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 13வது வயதில், அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் வேலை செய்தேன், விடுமுறைகள் மூன்று மாதங்கள் இருக்கும், அவற்றில் இரண்டரை மாதங்கள் வேலை செய்தேன் என்று தெரிவித்தார்.
நான் செய்த வேலை, எனக்கு நன்மை செய்தது மற்றும் என் கண்களைத் திறந்தது என்றும், தொழிற்கல்வி பள்ளியில் படித்தபோது, ஒரு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன், அங்கே காலை 7 மணி முதல், பகல் 1 மணி வரை வேலை செய்து, பிற்பகல் 2 மணிக்கு, மீண்டும் அவசர அவசரமாக, பள்ளிக்குச் செல்வேன், இவ்வாறு என்னைத் துரிதப்படுத்தியது, நிறைய கற்றுக்கொடுத்துள்ளது என்று திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
Comment